வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

பக்கத்து வீட்டு மாலதியின் பாத்ரூம்


இன்னைக்காவது பக்கத்துக்கு வீட்டு மாலதி குளிக்கும் போது எப்படியாவது அதை பார்த்து விடவேண்டும்! அதை நெனைக்கும் போதே  மனதிற்குள்  பட்டம் பூச்சிகள் பறந்தன. இரண்டு முறை ட்ரை பண்ணியாச்சி, காரியம் கை கூடவில்லை.
 ஒரு முறை முயற்சித்த போது மாலதியின் வீட்டுக்காரர் வந்து விட்டார், அவரிடம் சாக்கு போக்கு கூறி தப்பிச்சதே பெரும் பாடாய் போய்விட்டது.

அடுத்த முறை பாத்ரூம் கதவின் அருகே போய்ப் பார்த்து கொண்டிருக்கும் மாலதி குளித்து முடித்து கதவிலிருந்து துணிகளை உருவி எடுத்துவிட்டாள், சரியாக பார்க்க முடியாமல் ஏமாந்து திரும்பி விட்டேன் 

இன்று அருமையான சந்தர்ப்பம், அவளுடைய வீட்டுக்காரர் ஊருக்கு போயிருப்பதாக வேலைக்காரியின் மூலம் தெரிந்து கொண்டேன்.  அதனால் எந்தவித அவசரமின்றி வெகு நேரம் குளிப்பாள்,  இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது எனக் காத்திருந்தேன்.

மாலதி மாநிறமென்றாலும் நல்ல உடல் வாகு. பார்ப்பவர்களை மறுபடியும் பார்க்க தூண்டும்  கவர்ச்சி அவளிடம் உண்டு . அதில் அவளுக்கு ஒருவித பெருமை. குழந்தை இன்னும் இல்லை, அதனாலென்னவோ உடல் கட்டுக்கோப்பை இழக்கவில்லை. 

என் வீட்டு வேலைக்காரி துணியை ஊறவைத்து சென்றுவிட்டால் மீண்டும் மதியம் தான் வருவாள்.  இப்போது அவளும் கிளம்பி விட்டாள், எனக்கு இப்படி ஓர் சந்தர்ப்பம் கிடைத்ததை நெனைச்சு சந்தோசப்பட்டேன்.

பக்கத்துக்கு வீட்டில் வெளியே சத்தம் கேட்டது, ஆம் மாலதி தான் குளிப்பதற்கு தயாராகி விட்டாள், அவள் வெந்நீரை விளாவும் சத்தம் கேட்டது. என் வீட்டு காம்பவுண்ட் , மாலதி வீட்டு பாத்ரூம் சுவரை ஒட்டி இருப்பதால் அங்கு ஏற்படும் சத்தம் நன்றாக கேட்டது .  எனக்குள் படபடப்பு அதிகரித்தது. மெதுவாக ஈரத் துண்டு காய வைக்கும் சாக்கில் வெளியே வந்து நோட்டமிட்டேன். என் வீட்டு கம்பவுண்டிலிருந்து பக்கது வீட்டிற்கு  செல்ல ஓர் இடை வெளி உண்டு. அதில் தான் வேலைக்காரி வந்து செல்வாள்.

இப்போது மாலதி மாற்று துணிகளோடு பாத்ரூம் பக்கம் செல்வதை பார்த்தேன். மெதுவாக  நகர்ந்து அவளுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டேன். சிறிது நேரத்தில் பாத்ரூம் கதவு மூடும் சத்தம் கேட்டது. எனக்கு உள்ளுக்குள் மணியடித்தது. அக்கம் பக்கம் திரும்பி பார்த்து பாத்ரூம் அருகே சென்றேன்.

அப்போது மறுபடியும் மணியடித்தது, நம் மனசுக்குள் மணியடித்தால் இவ்வளவு சத்தமாகவா கேட்கும் என என்னை நானே கேட்கும் போது வெளியே நாய் குறைக்கும் சத்தம். மறுபடியும் மணி அடிக்கும் சத்தம், அட கஷ்ட காலமே ! நம் வீட்டில் தான் யோரோ ! காலிங் பெல் அடிக்கிறார்கள். யாரடா இது, பூஜை வேளையில் கரடி. விட்டுவிட்டு போகவும் மனசில்லை, மறுபடியும் பெல் சத்தம்,

வேகமாய் வீட்டிற்குள் போய் கதவை திறக்காமல் யாரது என எரிச்சல் கலந்த குரலில் கேட்டேன்.

பழைய பேப்பர் இருக்குங்களா? வரச்  சொல்லியிருந்தீகளே! என்றான் பழைய பேப்பர்காரன். இல்லப்பா ! அடுத்த வாரம் வா, சேர்த்து தாரேன் என்றேன் அவசரமாக. இருப்பதை கொடுங்க, பிறகு அடுத்த மாசம் தான் வருவேன் என்றான். இப்போ இல்லையப்பா, எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது, அடுத்த மாதம் வாங்கிக்கோ! என்று அவசரப்பட்டேன், சரிங்க ... என கூறி சென்று விட்டான்.

இவனுகளுக்கு நம்ம அவசரம் தெரியறதில்ல! என புலம்பியவாறு வேகமாக பின் புறம் சென்றேன், அதற்குள், மாலதி சோப் போட ஆரம்பித்திருந்தாள், மைசூர் சாண்டல் மனம் தூக்கியது.  மெதுவாக காம்பவுண்ட் இடை வெளியில் நுழைந்து ஓசைப்படாமல் மாலதி குளிக்கும் பாத்ரூம் கதவை நெருங்கினேன் .
அதில் பச்சை நிற சேலை, மாட்சிங் ப்ளவுஸ், பாவாடை தொங்கியது. முக்கியமான உள்ளாடையை காணோமே என்று கண்களை இடுக்கி பார்த்தேன். பாவாடைக்கும் பிளவுசுக்கும் இடையில் அந்த கருப்பு நிற பிரா தொங்கியது.  அதில்  வெள்ளை நூலில்  தைத்திருந்த ஊக்கு அது  என்னுடைய பிரா தான் என எனக்கு அடையாளம்  காட்டிற்று.   அப்பாடாநாம் நெனைச்சது கரெக்ட் தான், போன வாரம் தொலைந்து போன என கருப்பு பிரா இதே தான்.

இந்த வேலைக்காரி, பக்கத்துக்கு காம்பவுண்டில் காற்றடித்து விழுந்து விட்ட என் துணிகளை எடுக்கும் போது இதை மறந்து விட்டாள். இந்த சந்தேகம் எனக்கு அப்போதே வந்து அவளை விசரரித்தும் பார்த்துவிட்டேன், அவள்  எல்லா துணிகளையும் எடுத்து விட்டதாக சாதித்தாள்.

நேரடியாக மாலதியையே கேட்கவும் பயமாயிருந்தது, அவள் வெடுக்கென்று எதாவது சொல்லி விடுவாள். அதனால் தான் நாமே அவள் குளிக்கும் போது கண்டுபிடித்து விடலாமென்று, இன்று பார்த்துவிட்டேன். நாளை போய் தைரியமாய் கேட்டுவிடலாம், என்ன சொல்லுகிறீர்கள் !

வியாழன், 16 பிப்ரவரி, 2012

மருத்துவ காப்பீடு எடுக்கப் போகின்றீர்களா?


மக்களின் இப்போதைய தேவை மருத்துவக் காப்பீடு. மருத்துவ செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால் தான் மக்களும் எதாவது ஓர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளத் தயாராகி வருகின்றனர் . தற்போதைய தொலைக்காட்சி விளம்பரங்களும் மருத்துவ காப்பீட்டின் அவசியத்தினை மக்களிடம் அதிகமாய் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியுள்ளன.
இப்போது மார்ச் மாதம் நெருங்குகிறது! வருமான வரி செலுத்துபவர்கள், தங்கள் வரிவிலக்கிற்காக பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய காத்திருக்கும் தருணம் இது.  இத்தருணத்தை எதிர்நோக்கி காப்பீடு செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ‘ கொக்கு மீனுக்காக’ காத்திருப்பதை போல் தயாராக உள்ளனர். நமக்கும்  எதாவது ஒரு திட்டத்தில் சேர்ந்து காப்பீட்டு பத்திரம் வாங்கி அலுவலகத்தில் சமர்பித்தால் போதும்! அது தான்  இப்போதைய தேவை. அதைவிட்டு சேரும் திட்டம் நல்லதா அதனால் என்ன பயன் என்று ஆராய நேரமில்லை.
நமது ஏஜெண்டும், பல்வேறு கதைகளை கூறி நம்மிடம் பாலிசி பெறுவதிலேயே குறியாய் இருப்பார்.  “நான் பார்த்துகிறேன் சார், நாங்க எத்தனை பேருக்கு  பாலிசி எடுத்து கொடுத்து காப்பீடு செய்து உதவியிருக்கோம்” என்று  உங்கள் எதிர்காலமே அவர்கள் கையில் தான் என்ற வகையில் உங்களை ஏதோவொரு திட்டத்தில் சேர்த்து விட்டுவிடுவர். நாமும் அதோடு அதனை மறந்து விடுவோம்.
ஆனால், நமக்கு எதாவது உடல் கோளாறு ஏற்ப்பட்டு மருத்துவமனைக்கு போனால் தான், அங்கு சந்திக்கும் பிரச்சனைகள் தெரிய வரும். ”உங்களுக்கு ஏற்கனவே இந்த வியாதி இருந்திருக்கிறது, பாலிசி போடுவதற்கு முன்னமே ஏன் தெரிய படுத்தவில்லை, உங்களுக்கு இதில் மருத்துவ காப்பீடு அளிக்க இயலாது, உடனே பணத்தை காட்டுங்கள்” என்று எல்லாம் கூறி நம்மை சங்கடத்தில் ஆழ்த்திவிடும் போதுதான், பாலிசியின் உண்மை சொருபம் தெரிய வரும்.
இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்க நாம் பாலிசி போடுவதற்கு முன் அதைப் பற்றி நன்கு அறிந்து இருக்க வேண்டும், நம் ஏஜென்டிடம் நம் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே பாலிசி போட சம்மதம் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம் வயது, நமக்கு எதாவது வியாதி இருக்கின்றதா, இல்லையா என முன் கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்து அதனை நம் விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம், எதற்கு தேவை இல்லாமல் மருத்துவ பரிசோதனை, நமக்கு வியாதி எதாவது இருக்கவா போகிறது, வயது நாற்பது தானே ஆகிறது என நினைத்து விட்டு விட்டால் சங்கடம் நமக்கு தான்.
இப்படிச் செய்வதால், பாலிசியின் கட்டணம் கூடலாம், அதை நம் சரியாக கணித்திருக்க வேண்டும். பொதுவாக மருத்துவ காப்பீட்டு பலன்கள் நிராகரிக்கப்படுவதற்கு  முக்கிய காரணங்களில் ஒன்று , நாம் முன் கூட்டியே நமது உடல் கோளாறு பற்றிய உண்மைகளை மறைத்திருப்பது, அல்லது கூறாமலிருப்பது தான். இந்த அடிப்படியிலேதான் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள்  அதன் பலனை நிராகரிக்கின்றன .  முடிந்தவரை நமது உண்மை நிலையை முன் கூட்டியே தெரிவித்து இருப்பது நல்லது.
ஏஜென்ட் தட்டிக்கழித்தாலும் நாற்பது வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து அதன் விவரங்களை தெரிவித்து இருப்பது நலம். உதாரணமாக, நமக்கு சக்கரை வியாதி சம்பந்தமான அறிகுறி மருத்துவ பரிசோதனையில் இல்லை என வைத்து கொள்ளலாம். இதன் மருத்துவ சான்றிதழை ஏற்கனவே கொடுத்திருந்தால், பிறகு நமக்கு சக்கரை வியாதி வந்து அதற்க்கான மருத்துவம் பார்க்கும் போது உங்கள் மருத்துவ காப்பீட்டில் சந்தேகம் எழவே வாய்ப்பில்லை, ஏனென்றால் நீங்கள் ஏற்கனேவே உங்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என முன்கூட்டியே ஆதாரத்தோடு கொடுத்திருக்கின்றீர்கள் . ஆனால்,  இதனை நீங்கள் கொடுக்காத பட்சத்தில், உங்கள் பெற்றோருக்கு சக்கரை வியாதி இருந்திருந்தால் மருத்துவக் குழு, உங்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்கனவே இருந்திருக்கின்றது, ஆனால் நீங்கள் அதனை மறைத்து காப்பீடு செய்துள்ளீர்கள் என உங்களுக்கு எதிராக நிருபிக்க வாய்ப்பிருக்கின்றது. ஆகவே, மருத்துவ சோதனை முன்கூட்டியே செய்து விண்ணப்பிப்பது மிகவும் முக்கியம்.
சில நிறுவனங்கள் காப்பீடு செய்தவர்களின் நண்பர்கள், சொந்தங்கள், மற்றும் அக்கம் பக்கத்தாருடன் நண்பர்கள் போல் பேசி, உங்களுக்கு ஏதேனுமொரு பிரச்சனை முன் கூட்டியே இருக்கின்றதா என்று விவரங்கள் சேகரிக்க ஆட்களை அனுப்புகின்றதாக தகவல். இந்த மாதிரி நேரங்களில் உங்களின் மருத்துவ சான்றிதழ் தான் கை கொடுக்கும். ஏனென்றால், இந்த மருத்துவ பரிசோதனை செய்பவர்கள் காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவர்களும் தான். ஆகவே, உங்கள் வாதம் தான் வெற்றி பெரும்.
மருத்துவ பரிசோதனை செய்ய கடமைப்பட்டவர்கள் யார் யார் என்றால்,
  • 18 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேல் காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்த பரிசோதனை போன்றவை தேவைப்படும்.
  •  31 முதல் 40 வயது உள்ளவர்களுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேல் காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்தம், சிறுநீர் பரிசோதனை போன்றவை தேவைப்படும்.
  •  41 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு காப்பீடு செய்யும் போது முழு உடல் பரிசோதனை, எச்.ஐ.வி பரிசோதனை, இரத்தம், சிறுநீர் மற்றும் விரிவான பரிசோதனைகள் விவரம் தேவைப்படும்.

மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் ஒரு வாரத்திற்கு முன் நம்மை நாமே தயார் செய்து கொள்ளவேண்டும்.   நாம் உட்கொள்ளும் உப்பு , இனிப்பு போன்றவற்றின் அளவை எப்போதையும்விட குறைத்தே எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு சம்பந்தமான உணவு பதார்த்தங்களை தவிர்த்து கொள்ளுதல் நலம் . புகையிலை போன்ற லாகிரி வஸ்துகளை அறவே தொடக்கூடாது. நன்றாக உறங்கி நம் இரத்த அழுத்தத்தை சீராக்கி கொள்ளவேண்டும்.  அதிகமான உடற்பயிற்சி, நடை பயிற்சி வேண்டாம். இதனால் நம் உடல் உறுப்புகளின் செயல் பாடு சீராக இருக்க உதவும். இப்போது செய்யப்படும் மருத்துவ சோதனையானது நம் உடலின் உண்மையான செயல் பாட்டை தெரியப்படுத்தும், மேலும் நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அறிந்து கொள்ளலாம்.
மருத்துவ காப்பீட்டிற்காக நாம் செய்து கொள்ளும் இந்த மருத்துவ பரிசோதனையானது நமக்கு நன்மை தான் பயக்கும் !.